சீனாவின் ராஜதந்திர அழுத்தத்தில் இலங்கை சிக்கும் அபாயம்!
சீனாவின் இராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக தரமற்ற இயற்கை உரங்களின் இருப்புக்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Pattali champika Ranawakka) தெரிவித்துள்ளார்.
சேதன பசளை விவகாரம் தொடர்பான கருத்துக்களைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் பருப்பு அல்லது கொத்தமல்லி இருக்காது.
சேதன பசளை விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தில் உள்ளவர்களின் கருத்தை இவ்வாறான வாக்கெடுப்பின் மூலம் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிர்க்கட்சிகள் எப்போதும் ஆதரவளிக்கும். மக்களின் கருத்திலுள்ள யதார்த்தத்தை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டும்.
நாட்டிலுள்ள தனிநபர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். நாடு பாழடைந்த நிலைக்கு கொண்டு செல்லப்படுகின்றது. அரசாங்கத்தின் மீதும் அதன் செயற்பாடுகள் மீதும் பொதுமக்கள் முற்றாக ஏமாற்றமடைந்துள்ளனர்.
தரமற்ற பசளைகளை இறக்குமதி செய்வதன் பின்னணியிலுள்ள அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் எதிர்காலத்தில் பொறுப்பேற்க நேரிடும்.
எந்தவொரு நாடும் 100 சதவீத சேதன பசளைப் பாவனைக்கு மாறவில்லை. அது சாத்தியமற்றதே. சிலோன் தேயிலையின் பெயர் பாதிக்கப்படும் பட்சத்தில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் பாரியளவில் பாதிக்கப்படும்.
சீனாவின் இராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக தரமற்ற இயற்கை உரங்களின் இருப்புக்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதால், கப்பலை திருப்பி அனுப்பலாம், ஆனால் மீண்டும் இலங்கைக்குள் வர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.