சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில் தவறில்லை -அரசாங்கத்திலிருந்து எழுந்தது குரல்
நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்த வேளையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதில் தவறில்லை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
எனினும், சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியையோ அல்லது வேறு ஒரு நட்பு நாட்டின் ஆதரவையோ பெற வேண்டியது மிகவும் அவசியமானது எனவும், இலங்கை தற்போது டொலர் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பல அரசாங்கங்கள் நெருக்கடியான காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தை நாடின.ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டன, அத்துடன் ஏற்க முடியாதவற்றை நிராகரித்தன.
நஷ்டத்தில் இயங்கும் சில நிறுவனங்களை தனியார் மயமாக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதிக்கலாம் என தெரிவித்த அமைச்சர், அரச சேவைக்கு புதிதாக ஆட்களை இணைத்துக் கொள்ளக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.
அரச சேவைக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதில் தற்போதைக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் போன்ற அதிக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்குவது பிரச்சினையாக இருக்காது எனவும் அமரவீர தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.