புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் திலீபனுக்கு அஞ்சலி
தமிழ் மக்களின் தாயக விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத போராளியாகவும் முதன்மைத் தியாகியாகவும் இருக்கும் தியாக தீபம் தீலிபனின் அறவழி போராட்டத்தின் ஆரம்ப நாளான இன்று சமூக ஊடகங்கள் உட்பட தாயகம் மற்றும் புகலிட நாடுகளில் அவரது தியாகம் போற்றப்பட்டுவருகிறது.
இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஒரு கொள்கையில் ஒருவர் எவ்வளவு உறுதியாக இருக்க முடியும், ஒரு போராட்டத்தை எவ்வளவு உன்னதமாக நடத்த முடியும் என்று உலகுக்கே உணர்த்தியவரே தியாக தீபம் திலீபன்.
ஈழ மக்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் 1987 ஆம் ஆண்டு இன்று போலொரு நாளில் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து திலீபன் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்.
மஹாத்மா காந்தியின் அகிம்சை தத்துவத்தைத் தனது அடிப்படை அரசியல் கொள்கையாக பறை சாற்றும் இந்திய அரசிடம், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு நீதி கேட்டு அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும். அவசரகாலச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றிலுமாகத் திரும்பப்பெற வேண்டும். தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து திலீபன் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டார்.
இறுதி வரை இந்தக் கோரிக்கைக்கு இந்திய அரசோ சிறிலங்கா அரசோ செவிசாய்க்காத நிலையில், 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி தீலிபன், தியாக மரணத்தை தழுவியிருந்தார்.
தீலிபனின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதை குறிக்கும் வகையில் இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
யாழ். நல்லூரில் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தியாக தீபம் தீலிபனுக்கு தாம் அஞ்சலி செலுத்தியமை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்திருந்தார்.
