தடை உத்தரவை மீறியும் எழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் (படங்கள்)
தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவேந்தலை தடுக்க முயன்ற காவல்துறையினரின் தடை உத்தரவையும் மீறி மக்கள் உணர்வுபூர்வமாக நினைவேந்தலை நடத்தி முடித்துள்ளனர்.
இன்றைய தினம் (26) திருகோணமலை குளக்கோட்டம் மண்டபத்தில் காலை 9 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை தடுக்கும் நோக்கில் திருக்கோணமலை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி பயாஸ் ரசாக் அவர்களின் அனுமதியுடன் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
தடை உத்தரவு
குறித்த தடை உத்தரவு முற்றிலும் சிங்களத்தில் இருந்ததும் அதனை தமிழில் மொழி பெயர்த்துக்கூற ஒரு காவல்துறை அதிகாரியும் இல்லாத நிலையில் நீண்ட நேரம் ஓர் முரண்பாடே உருவாகிவிட்டது.
தடைகள் அனைத்திற்கும் மத்தியில் பொதுமக்கள் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக நடத்தி முடித்துள்ளனர்.
தியாக தீபம் திலீபனின் உருவப்படம் வைக்க தடை விதித்த நிலையில், மண்டபத்தில் இருந்த கதிரை ஒன்றில் அவர் இருப்பதாக உருவகித்து மாலைகள் அணிவித்தும், மெழுகுவர்த்திகளை கொளுத்தியும் நினைவேந்தலை நடத்தினர்.
சுமார் 70 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நினைவேந்தலில் பங்குபற்றியிருந்தனர். ஜனநாயக நாடு என்று சொல்லும் தேசத்தில் ஒரு இனத்தின் விடுதலைக்காய் போராடிய உன்னத மனிதனிற்கு நினைவேந்தல் மேற்கொள்ளவும் உரிமை மறுக்கப்படுவதை கண்டிக்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இனவெறியின் உச்சம்
ஒரு இனத்தவர் மீதான தடை உத்தரவு சிங்கள மொழியில் இருப்பதும் அதனை மொழிபெயர்க்கக்கூட ஒரு அதிகாரி இல்லாமல் இருப்பதும் இனவெறியின் உச்சம் என்பதைக்காட்டிலும் வேறென்னவென்று சொல்ல முடியும்.
ஊடகவியலாளர்களின் பெயர் குறிப்பிட்டு தடை உத்தரவு ஊடக சுதந்திரத்தினை ஒடுக்குவதற்கு ஒப்பானது என்றும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், வடக்கு கிழக்கில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல நீதிமன்றங்களில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை உத்தரவை காவல்துறையினர் கோரியிருந்தது போதிலும் பல நீதிமன்றங்கள் தடை உத்தரவு வழங்க மறுப்பு தெரிவித்திருந்தது.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் "இன முருகல் ஏற்படும்" என்ற வாதத்தை முன்வைத்து காவல்துறையினரால் தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், இனமுருகல் ஏற்படும் எனில் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் நடுநிலையாக இருக்க வேண்டிய நிலையில், ஒரு பக்கத்தின் உரிமைகளை மாத்திரம் தொடர்ச்சியாக கட்டுப்படுத்தி வருவது சரியானதா? என்ற கேள்வியை நீதித்துறை மற்றும் நிறைவேற்று துறைக்கு எதிராக எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்