தியாக தீபத்தின் சிலை விவகாரம் : யார் கூறுவது உண்மை....
யாழ்ப்பாணம் - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச்சிலை நேற்றைய தினம் (27) யாழ்ப்பாணம் காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், எங்களுக்கு எந்தவித அறிவுறுத்தலும் வழங்காமல் திடீரென வாகனங்களில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதணிகளுடன் வந்து திலீபன் அண்ணாவின் சிலையை உடைத்துச்சென்றுள்ளனர்.
அநுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக தன்னுடைய முகவர்களைப் பயன்படுத்தி தேர்தல் காலப்பகுதியில் நினைவேந்தல்களை அனுமதிப்போம், சிலைகளை நிறுவுவோம் என்று மேடை மேடையாகச் சொல்லியிருந்தார்கள்.
அநுர அரசு சார்பில் போட்டியிட்டவர்கள் மாவீரர்களை நினைவுகூருவதற்கான சந்தர்ப்பம் உறுதிப்படுத்தப்படும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தனர்.” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், குறித்த சிலையை அகற்றுகின்ற நடவடிக்கைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
இதற்கு யாழ் மாநகர சபை பொறுப்பேற்க வேண்டும். இதற்கு ஏதாவது பிரச்சினைகள் வருமாக இருந்தால் அதற்கான அனுமதி கொடுத்தார்களா, அனுமதியை அகற்றினார்களா, என்பது தொடர்பாக மாநகர சபையை சரியான தீர்மானம் எடுக்க வேண்டும்.
தீர்மானங்களும் முடிவுகளும் சரியாக எடுக்காத காரணத்தினால் அவர்கள் செய்யாத வேலையை இன்றைக்கு காவல்துறையினர் செய்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்த யாழ் மாநகர சபை முதல்வர் வி.மதிவதனி, தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வில் திலீபன் நினைவிடத்தில் வைபரால் ஆன நினைவுச் சிலை வைப்பதற்கு தற்காலிக அனுமதி கோரியிருந்தனர்.
இந்த நிலையில் சபைக்கு பிரேரணையை முன்வைத்த போது 15.09.2026 முதல் 26.09.2026 வரை தற்காலிகமாக குறித்த சிலையை நிறுவுவதற்கான அனுமதியை சபை உறுப்பினர்கள் வழங்கியிருந்தனர். அதன்பிற்பாடு யாழ் காவல்நிலையத்தில் இருந்து என்னிடம் தொடர்ச்சியாக விளக்கம் கோரப்பட்டு வந்தது.
ஒரு பெருமகனுக்காக வைக்கப்பட்ட சிலையை அகற்றியமை ஏற்றுக்கொள்ளக்கூடாத விடயம் ஆகும். இது முன்னரே தெரிந்திருந்தால் சிலையை வைத்தவர்களும் நாங்களும் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |