தாக்குதலை திட்டமிட்ட உளவுத்துறை! மயிரிழையில் உயிர் தப்பினோம் : கஜேந்திரன் நேரடி ரிப்போர்ட்
தமிழர்களின் அறவழி தியாகியான திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியை நேற்று(17) திருகோணமலையில் வைத்து இடைமறித்த சிங்கள காடையர்குழு அதன் மீது மோசமான தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து நல்லூர் வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஊர்திப் பவனி 03 ஆம் நாளாக நேற்று திருகோணமலை நோக்கி பயணித்த போது கப்பல்துறைமுக பகுதியில் வைத்து சிறிலங்காவின் தேசியக்கொடியை தாங்கிய காடையர் குழு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
நேற்று முன்தினம்(16) இரவே இவ்வாறான ஒரு தாக்குதலுக்கு திட்டமிடப்பட்ட நிலையில், நேற்று பகல் நினைவு ஊர்தியை வழிமறித்த காடையர்கள் அதன் மீது பொல்லுகள் மற்றும் தடிகளால் தாக்கி அதனை சேதப்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னால் வந்த செயற்பாட்டாளர்களின் வாகனத்தையும் அவர்கள் ஆக்ரோசமாக தாக்க முயற்சித்துள்ளனர்.
இந்த தாக்குதலை சிறிலங்காவின் உளவுத்துறையினரே திட்டமிட்டதாகவும், மயிரிழையில் தாம் உயிர் தப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் தொலைபேசி வழியில் இணைந்த அவர், தாக்குதலில் 14 பேர் காயமடைந்ததாகவும் கூறினார்.
உண்மையில் என்ன நடந்தது? அவர் கூறும் விடயங்களை காணொளில் பாருங்கள்
சுகாஷின் கருத்து
இந்த தாக்குதல் சம்பவமானது கடந்த சில தினங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாகவும், ஊர்திப்பவனியை தொடர்ச்சியாக சிலர் பின்தொடர்ந்து குழப்பத்தினை ஏற்படுத்தி வந்ததாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் காவல்துறையினர் செயற்படுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீது சிறிலங்காவின் தேசிய கொடியை தாங்கியவாறு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் தாக்குதல் நடத்திய போது இதனைத் தடுக்க முற்படாது தாக்குதல் மேற்கொள்பவர்களின் பின்னாலிருந்து தாக்குதலை தடுக்க முற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.