அரச ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : ஜனவரியில் மூன்றாவது கட்ட ஊதிய உயர்வு
அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 2027 ஜனவரி மாதம் மூன்றாவது கட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை (21) நாடாளுமன்றத்தில் 2027 வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றிய பிரதமர், அரசாங்கத்தின் அடிப்படை ஊதிய உயர்வுத் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்கள் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைய விசேட ஆணைக்குழு
மேலும், தற்போதுள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைவதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு, தனது அறிக்கையை 2027 ஜூலை மாதம் சமர்ப்பிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த முரண்பாடுகளைச் சரிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
பிரதமர் மேலும் சில முக்கிய முன்னேற்றங்களைதெரிவித்துள்ளார்.
இணையவழி முறைமையின் ஊடாகச் சேவைகள் பரவலாக்கப்பட்டதன் விளைவாக, ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பயனடைபவர்களின் எண்ணிக்கை 2025 இல் 1,664 ஆக இருந்த நிலையில், 2026 இல் 27,948 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜனாதிபதி நிதியத்தின் நிதி வலிமை 150% அதிகரித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான 'மஹாபொல' புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் 100% அதிகரிக்கப்பட்டுள்ளன.
'சுரக்சா' காப்புறுதித் திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கான 'சுரக்சா' காப்புறுதித் திட்டம், கூடுதல் சலுகைகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு வசதிகளுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுமார் 2,000 மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நாடாளுமன்றச் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, தனிப்பட்ட ரீதியில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைப் பிரதமர் விமர்சித்தார்.
அரசாங்கம் ஆக்கபூர்வமான மற்றும் கண்ணியமான விமர்சனங்களை வரவேற்பதாகவும், அதேவேளையில் எதிர்க்கட்சியினர் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |