திருநாவற்குளம் பிரதான வடிகால் தூர்வாரலில் ஊழல்
திருநாவற்குளம் பிரதான வடிகால் தூர்வாரலில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக மாநகரசபை உறுப்பினர் சி.கிரிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, திருநாவற்குளம் பிரதான வடிகால் தூர்வாரப்பட்டதில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக, குறித்த வேலைத்திட்டத்தின் விசாரணை அறிக்கையினை அடிப்படையாக வைத்து தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள்.
தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது, வவுனியா மாநகர சபையின் ஆட்சி கடந்த மூன்று நான்கு மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்த குறுகிய காலப்பகுதியில், ஆட்சியில் இருந்தவர்களால் பல ஊழல்கள் மற்றும் மோசடிகள் செய்யப்பட்டதாக எமக்கு பல சந்தேகங்கள் எழுந்தன.
மேலும், இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பிலிருந்தும் பல முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்தன. என்றாலும், நாம் உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல், இது குறித்து முறையான விசாரணை நடத்தி அதன் மூலமே மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று பொறுமையாக இருந்தோம்.
அதன் அடிப்படையில், குறித்த மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து வட மாகாண ஆளுநரிடம் நாம் பலமுறைப்பாடுகளைச் செய்திருந்தோம்.
எமது முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, ஆளுநரினால், திறமையான அதிகாரிகளை கொண்ட விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டன.
தற்போது குறித்த விசாரணையின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நாங்கள் இப்போது பேசுவது எமது ஊகங்களின் அடிப்படையிலோ அல்லது பொதுமக்கள் வழங்கிய புகார்களின் அடிப்படையிலோ அல்ல.
மாறாக, உத்தியோகபூர்வ விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே இத் தகவல்களை முன்வைக்கிறோம்.
மேலும் மாநகர சபையின் உறுப்பினர்களாகிய நாங்கள், இவ்வாறான மோசடிகளுக்கு உடந்தையாக இருந்தோம் என்ற பெயர் எமக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், குறித்த விளக்கத்தை அளிக்கிறோம்” என கூறியுள்ளார்.
செய்தி - கபில்