ரணிலின் படத்தை மாற்றி அநுர படம் ஒட்டப்பட்ட பட்ஜட் : விமர்சிக்கும் வஜிர
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நேற்று (பெப்ரவரி 17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் நீட்சியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன(vajira abeywardena) தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) பெயரைக் கொண்ட பட்ஜட் புத்தகத்தின் அட்டைப்படம் வேறொருவரின் பெயருக்கு மாற்றப்பட்டது மட்டுமே இங்கு நடந்துள்ளது என்றும் முன்னாள் எம்.பி. கூறினார்.
ரணில் சமர்ப்பித்த பட்ஜட்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் முன்வைத்த பட்ஜட் திட்டங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறிய அவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தூய்மையான இலங்கை(clean sri lanka) திட்டம் மட்டுமே புதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு பட்ஜட்டில், புதிய திட்டத்தை முன்வைக்கும் அளவுக்கு திசைகாட்டி அரசாங்கத்தின் தலைவர்களுக்கு போதுமான அறிவு இல்லை என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
ஐ எம். எவ் ஒப்பந்தங்களின்படி தயாரிக்கப்பட்ட பட்ஜட்
இந்த வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வருவாய் ஈட்டும் ஒரே ஒரு திட்டம் மட்டுமே இருப்பதாகவும் அபேவர்தன தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வருவாய் நல்ல நிலையை எட்டியதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறிய அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் (2024 இல்), கலால் துறை மற்றும் சுங்கத் துறை சாதனை வருவாயைப் பெற்றிருந்ததைக் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
