அரசாங்கத்தின் இரகசியத்திட்டம் இதுதான் - அம்பலப்படுத்திய ஐ.தே.க
அரசாங்கமானது இலவசக் கல்வியின் சம உரிமையை இல்லாமலாக்கியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இணையவழியில் கல்வி கற்பதற்கு அத்தியாவசியமான உபகரணங்களின் விலை அதிகரிக்கச் செய்திருப்பதன் மூலம் இதனை இல்லாது செய்றள்ளது எனவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்திருக்கும் உத்தரவாத தொகை அதிகரிப்பினால் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று நிலைமையில் மாணவர்கள் இணையவழி கல்வியையே பெற்றுவருகினறனர்.
இவ்வாறான நிலையில் மாணவர்களுக்கு அத்தியாவசியமான தொலை தொடர்பு உபகரணங்களின் விலை அதிகரிக்கச்செய்துள்ளது.
இறக்குமதி விதிமுறைகளை விதிப்பதன் மூலம் இலவச கல்வியின் சம உரிமையை இல்லாமலாக்குவதற்கு நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
பொருளாதார பிரச்சினைக்கு மத்தியிலும் இணையவழி கல்வியை பெற்றுக்கொடுப்பதற்காக பெற்றோர்கள் மிகவும் சிரமத்துடன் தங்கள் பிள்ளைகளுக்கு தொலைபேசி மற்றும் மடிக்கணணிகளை கொள்வனவு செய்துகொடுப்பதற்கு நடவடிக்கை செய்துவருகின்றனர்.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் தொலை தொடர்பு உபகரணங்களை அத்தியாவசியமற்ற பொருட்களில் உள்ளடக்கி, இறக்குமதி விதிமுறைகளுக்குள் உள்ளடக்கி இருக்கின்றது. அதனால் இந்த பொருட்களின் விலை இரண்டு மடங்காக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அத்துடன் எமது நல்லாட்சி அரசாங்க காலத்தில் மாணவர்களுக்கு இலவச டெப் கணணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தபோது, இன்று ஆட்சியில் இருப்பவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலவசக்கல்வியை இல்லாமலாக்கி, வசதி குறைந்த மாணவர்களை தங்களின் கைப்பாகையாக ஆக்கிக்கொள்வதற்கான திட்டமாகவே தெரியவருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.