வெளிநாடுகளுக்கு செல்ல முயலும் இலங்கை இளைஞர்கள்! புதிய காரணத்தை கண்டுபிடித்த சாகர காரியவசம்
நாடு,தேசம் என்ற வகையில், ஏதோ ஒரு நல்லவழிப் பிறக்க போகும் அடையாளங்களை காணமுடிகின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே சாகர காரியவசம் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) கொண்டு வந்துள்ள வரவு செலவுத்திட்டம் சிறந்த வரவு செலவுத்திட்டம் எனவும் இம்முறை முழுமையான அபிவிருத்தி வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோய் காரணமாக வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய தொழிலாளர்கள் மீண்டும் கடவுச்சீட்டை பெற வரிசையில் நின்று, வெளிநாடு சென்று, தாய் நாட்டுக்கு தமது பங்களிப்பை வழங்க முயற்சித்து வருகின்றனர் எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.