இது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வாரம்: கிண்டலடிக்கும் ரோஹித அபேகுணவர்தன
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன (Ravi Seneviratne) நாடாளுமன்ற குழுவில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பற்றி குறிப்பிட்டதாக வெளியான செய்தியின் உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மதுபான வாரம், பட்டலந்த வாரம் போன்று இந்த வாரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வாரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மின்கட்டண குறைப்பு
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தது. அரசாங்கம் பதவி காலத்தில் ஒருவருடத்தை நிறைவு செய்துள்ளது. ஆனால் வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
பதவிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் எதிர்வரும் வாரம் மின்கட்டணத்தை 6 சதவீதத்தால் அதிகரிக்க உத்தேசித்துள்ளீர்கள். இது எந்தளவுக்கு நியாயமானது.
மக்களின் அரசியல் சிந்தனையை திசைதிருப்பும் வகையில் அரசாங்கம் புதிய விடயங்களை சமூகமயப்படுத்துகிறது. மதுபான வாரம், பட்டலந்த வாரம், ஐஸ் வாரம், கஜ்ஜா வாரம் என்று ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விடயங்கள் குறிப்பிடப்பட்டன. ஆனால் எந்த விடயமும் முழுமையாக விசாரிக்கப்படவில்லை. அதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
நாடாளுமன்ற குழுவில் குறிப்பிட்ட விடயம்
இந்த வாரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வாரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பற்றி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாடாளுமன்ற குழுவில் குறிப்பிட்டதாக வெளியாகியுள்ள செய்தியின் உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
குண்டுத்தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆகவே இந்த வாக்குறுதியையும் ஏனைய வாக்குறுதிகளை போன்று பொய்யாக்க கூடாது என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
