தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப்போட்டி (படங்கள்)
தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - சுதந்திரபுரம், நிரோஜன் விளையாட்டு மைதானத்தில் குறித்த மென்பந்து கிரிக்கெட் போட்டியானது தாயக செயலணியால் இன்று(23) ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
குறித்த நிகழ்வானது தாயக செயலணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சா.உதயன் தலைமையில் இன்று (23) காலை 9.15 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மென்பந்து போட்டியானது ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
மிகவும் சிறப்பாக நடைபெற்றுவரும் குறித்த போட்டியில் முதலில் இளந்தளிர் மற்றும் நிரோஜன் விளையாட்டு கழகங்கள் முதல் போட்டியை எதிர் கொண்டுள்ளது.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் இவ் மென்பந்து போட்டியில், 25 ஆம் திகதி இறுதி போட்டி நடைபெறவுள்ளது.
திலீபனின் நினைவை சுமந்த
வெற்றிபெறும் அணிக்கு திலீபனின் நினைவை சுமந்த வெற்றிக் கிண்ணமும் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்படவுள்ளது.
இப்போட்டியானது அணிக்கு பதினொருவர் கொண்ட ஐந்து பந்து பரிமாற்றங்களை கொண்ட போட்டியாகும். இதில் 14 அணிகள் பங்குபற்றவுள்ளது.
இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், சமூக செயற்பாட்டாளர்களான, பீற்றர் இளஞ்செழியன், தியாகு மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாளை( 24)ஆம் திகதி ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஓட்டமும், 25 ஆம் திகதி துவிச்சக்கர வண்டி ஓட்டமும் இடம்பெறவுள்ளது.
அதனை தொடர்ந்து (26)ஆம் திகதி குறித்த மைதானத்தில் அடையாள உண்ணாவிரதமும், கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.