தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றால் தள்ளுபடி!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனி ஆனது கிழக்கு மாகாணத்தை தாண்டி வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து வருகின்றது.
இதன்போது அதிகளவான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலைமையில் குறித்த நிகழ்வை பல்வேறு காரணங்களை காட்டி தடை செய்வதற்காக காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் பல்வேறு நீதிமன்றங்கள் தடை செய்ய மறுத்து வருகின்றன.
இவ்வாறான பின்னணியில் கடந்த 19.09.2023 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை, மற்றும் ஒட்டுசுட்டான் பகுதிகள் ஊடாக குறித்த ஊர்தி பவனி வருகை தருவதாக அறிந்த காவல்துறையினர் அன்றைய தினத்தில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் தடை கோரி வழக்குகள் தாக்கல் செய்தனர்
வழக்கு தள்ளுபடி
குறித்த வழக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா தள்ளுபடி செய்திருந்தார்.
இதேவேளை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடை கோரிய வழக்கை கொண்டு வந்த போது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் குறித்த வழக்கையும் தள்ளுபடி செய்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் நேற்றைய தினம் மல்லாவி மற்றும் மாங்குளம் பகுதிகளுக்கு குறித்த ஊர்தி பவனி வருகை தருவதாக அறிந்த காவல்துறையினர் நேற்றைய தினம்(22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு பிரதேசங்களிலும் குறித்த நினைவேந்தலுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிபதி த.பரஞ்சோதி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் பலரும் இந்த விடயத்திற்கு வாதிட்டு இருந்தனர்.
தடை உத்தரவுகள்
இதன் அடிப்படையில் காவல்துறையினரால் கொண்டுவரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அந்த தடை உத்தரவுகள் வழங்கப்படாமல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டதோடு மக்கள் உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தியதையும் அவதானிக்க முடிந்தது.