சிறிலங்காவில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட நிலை - ஐ. நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் அதிருப்தி
ஜனநாயக சமூகத்தை உறுதி செய்வதில் ஊடகவியலாளர்களின் பங்கின் முக்கியத்துவத்தை சிறிலங்காவிலுள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் (Hanaa Singer) சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர் தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக கவலை வெளியிட்டுள்ளார். கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்ய ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு இன்றியமையாதது என ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். விமர்சனக் குரல்களை மௌனமாக்குவது பொது விவாதம், சுதந்திரம் மற்றும் அனைவரின் மனித உரிமைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிலங்கையின் குடிசார் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தெரிவித்திருந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, தென்னிலங்கையின் பிரபல சிங்கள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீது நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டு வளாக காவலாளிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, வளாகத்திற்குள் நுழைந்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிலியந்தல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே சிறிலங்காவிலுள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
#Journalists & #activists play a fundamental role in ensuring a democratic society and their protection is vital to ensure freedom of expression, transparency and accountability. The silencing of critical voices, undermines public debate, freedom and the human rights of everyone.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) February 15, 2022
