வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல்
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கல்குடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
5 பேர் கொண்ட குழு நேற்று (25.05.2026) தமிழ் ஊடகவியலாளரின் வீட்டுக்கே சென்று இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வாழைச்சேனை இந்து கல்லூரியில் நியமிக்கப்பட்ட அதிபருக்கு எதிராக இன்று பாடசாலையை மூடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பழைய மாணவர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஊடக அறிக்கை
இந்த நிலையில் பேத்தாளையில் உள்ள அந்த பகுதி ஊடகவியலாளருக்கு வீட்டிற்கு சம்பவ தினமான நேற்று பகல் பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர், பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் , வேறொரு பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வரும் நபர், பிரதேச சபை காவலாளியாக கடமையாற்றி வருபவர் உள்ளிட்ட குழுவினர் சென்று நாளைய ஆர்ப்பாட்டத்தை ஊடக அறிக்கையிட வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதற்கு ஊடகவியவாளர் “அதிபர் நன்றாக பாடசாலையை நடத்துகின்றார் என தெரிவித்து இது தேவையற்றது என்னால் வரமுடியாது” என அறிவித்துள்ளதையடுத்து அவரை கவனிக்க வேண்டிய வகையில் கவனிப்போம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |