ஹோமாகம காவல் நிலைய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
ஹோமாகம காவல்துறை காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மருத்துவ அறிக்கையில், அவரது மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்ததும், மூளையில் இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
அவர் தாக்குதலுக்கு உள்ளானதே அவரது மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர் என்று மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு
கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதான இஷார ஹர்ஷ குமார என்பவர், கடந்த 25 ஆம் திகதி ஹோமாகம காவல் நிலையத்தில் காவலில் இருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.

காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த, விசாரணைகளின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, குறித்த நபரின் தலையிலும் காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம்
உயிரிழந்த நபர் சிறையறைக்குள் அடைக்கப்படுவதற்கு முன்னதாக, காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் (Crime Division) சிறிது நேரம் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பான சூழல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மருத்துவ அறிக்கையின் முடிவுகளும், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் முடிவுகளும், மரணத்திற்கான சரியான காரணத்தையும், இந்தச் சம்பவத்திற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளையும் கண்டறிய மிக முக்கியமானதாக அமையும் என்று சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |