பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரியால் மாணவர்களுக்கு நேர்ந்த கதி! அம்பலப்படுத்திய சஜித்
கொழும்பில் முன்னணி சகோதரமொழி பாடசாலையொன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் மூன்று மாணவர்களை அத்துமீறல் செயற்பாடுகளுக்கு உள்ளாக்கி துன்புறுத்திய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் இம்மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் அதிபர், ஆசிரியர்களிடம் முறைப்பாடு செய்த போதிலும் கூட இவ்விடயம் தொடர்பில் இத்தனை நாட்கள் கடந்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு அதிகாரி தலைமறைவு
இவ்வாறு மூன்று மாணவர்களை அத்துமீறலுக்கு உள்ளாகிய தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தலைமறைவாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முறைப்பாடுகள் வழங்கியிருந்த போதிலும் இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், சம்பவம் அதிபருக்கும் அறிந்திருக்கும் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சஜித் குற்றச்சாட்டு
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “கொழும்பில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையொன்றில் மூன்று மாணவர்கள், பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, துன்புறுத்தப்பட்ட மாணவர்கள் இன்னும் மருத்துவரிடம் கூட முன்னிலைப்படுத்தப்படவில்லை.
குறித்த பாதுகாப்பு அதிகாரி மீது எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சம்பவத்தை இரண்டு ஆசிரியர்கள் அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது, அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று கூறி பெற்றோர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பாடசாலையின் முன் போராட்டம் நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுடன் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அரசாங்கம் நடவடிக்கை
இதேவேளை, குறித்த விவகாரம் தொடர்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என சுட்டிக்காட்டினார்.
காவல்துறை மற்றும் கல்வி அமைச்சு இந்த விடயத்தில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் இதுபோன்ற சம்பவங்களைப் புகாரளிக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கும் உள்ளதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கருத்து தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
