சஜித்தின் காய் நகர்த்தலால் ரணிலுக்கு காத்திருக்கும் சவால்!
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை ஒன்றிணையுமாக இருந்தால், அது சஜித் பிரேமதாசவின் கொள்கைகளை பிரதானமாகக் கொண்டே இயங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனை விதிக்க எதிர்ப்பாரத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான முன்மொழிவை தயாரிப்பதற்காக மூவரடங்கிய குழு ஒன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மூவரடங்கிய குழு
ஐக்கிய மக்கள் சக்தியின் கபீர் ஹஷீம், S.M. மரிக்கார் மற்றும் முஜூபுர் ரஹ்மான் ஆகியோரை குறித்த குழுவில் நியமிக்க அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு இணையும், அதன் அமைப்பு போன்றவை தொடர்பான முன்மொழிவை தயாரிப்பதற்கு குறித்த குழு நியமிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், இரு கட்சிகளும் ஒன்றிணையுமாக இருந்தால், அது ஐக்கிய மக்கள் சக்தியை பிரதானமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊழலுக்கு எதிர்ப்பு
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் இலஞ்ச, ஊழல்கள் அல்லது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நபர்கள் சார்பாக முன்னிலையாகப் போவதில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொது மக்கள் நிதியைப் பயன்படுத்தி அவர் தனது மனைவியுடன் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இவ்விடயத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், தற்போது நிதி மோசடி அல்லது இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட எந்தவொரு அரசியல்வாதியின் சார்பாகவும் முன்னிலையாகப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
