தொடர்ச்சியான சத்தியாக்கிரகத்திற்கு தயாராகும் விமல் வீரவன்ச!
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களை மீளப் பெற வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் கோரி, கல்வி அமைச்சின் முன் தொடர்ச்சியான சத்தியாக்கிரகத்தை ஆரம்பிக்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தீர்மானித்துள்ளார்.
நேற்று (10.01.2026) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த தொடர்ச்சியான சத்தியாக்கிரகம் நாளை 12 ஆம் திகதி காலை 9 மணி முதல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சத்தியாக்கிரகம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ தங்கள் குழந்தைகளை நேசிக்கும் அனைத்து பெற்றோர்களும் இந்த தொடர்ச்சியான சத்தியாக்கிரகத்தில் எந்த பாகுபாடும் இன்றி இணைந்துக் கொள்ள முடியும்.

மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் கல்வி சீர்திருத்தங்களுக்கு பதிலாக, இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் சரியான வாய்ப்புகளை வழங்காத முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் இந்த சீர்திருத்தங்கள் முற்றிலும் ஒரு மோசடியாக மேற்கொள்ளப்படுகின்றன.
மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் திட்டமும் இந்த சீர்திருத்தங்களில் இணைக்கப்பட்டுள்ளமை என்பது மிகவும் தீவிரமான விடயம்.முழு நாடும் இதில் அவதானம் செலுத்தி குழந்தைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆபாச வலைத்தளங்கள் மற்றும் ஆபாச யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட இந்த புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது மிகவும் கடுமையான சூழ்நிலை. இந்த சூழ்நிலைகள் குறித்து சமூகத்தின் அறிஞர்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும்.
குறித்த வலைத்தளங்கள் இணைக்கப்படுவதால், இலட்சக்கணக்கான மக்கள் அந்த வலைத்தளங்களை அணுகுகிறார்கள், இதன் மூலம் பணம் திரட்டும் பாரிய மோசடி ஒன்று செயற்படுகிறது. அந்த பணம் யாருக்குச் செல்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம்.
இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் மீளப் பெறப்படும் வரை, 12 ஆம் திகதி ஆரம்பிக்கும் தொடர்ச்சியான சத்தியாக்கிரகம் நிச்சயமாக மேற்கொள்ளப்படும்” எனவும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |