காவல் நிலையத்தில் தமிழ்பெண் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் - உயரதிகாரி உட்பட மூவர் கைது
கொழும்பு வெலிக்கடை காவல்துறை காவலில் வைத்து ராஜன் ராஜகுமாரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று காவல்துறை உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கி ராஜகுமாரி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மரணம் தொடர்பில் சந்தேகம்

இலங்கையின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான சுதர்மா ஜயவர்தனவின் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய 42 வயதான ஆர்.ராஜகுமாரி, பணியாற்றிய வீட்டில் திருட முயற்சித்த குற்றச்சாட்டில் வெலிக்கடை காவல்துறையினரால் கடந்த மே 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் அன்றைய தினமே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததையடுத்து, மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
தனது மனைவியின் உடலில் தாக்குதலுக்கு இலக்கான காயங்கள் காணப்பட்டதாகவும் அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணான ராஜகுமாரியின் கணவர் செல்வதுரை ஜேசுராஜ் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவரது மரணத்திற்கு நீதி கோரி கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கி ராஜகுமாரி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கொழும்பு புதுக்கடை இலக்கம் 04 நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி காவல்துறை அதிகாரி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.