கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (22.02.2025) இடம்பெற்றுள்ளது.
பாதாள உலக கும்பலின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கடந்த (19.02.2025) கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதிரடிப் படை
கணேமுல்ல சஞ்சீவ, பூசா சிறைச்சாலையிலிருந்து நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றது.
வழக்கறிஞர் வேடமணிந்து வந்த நபரொருவரும் மற்றும் அவருக்கு உதவியாக பெண்ணொருவரும் திட்டமிட்டு குறித்த கொலை இடம்பெற்றது.
இதையடுத்து, துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட 34 வயதுடைய சந்தேகநபரை புத்தளம் பாலவி பகுதியில் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
கைது நடவடிக்கை
இந்நிலையில் சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கம்பஹா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததுடன், குற்றத்திற்கு முந்தைய நாள் துப்பாக்கியை துப்பாக்கிதாரிக்கு கிடைக்க செய்ததன் அடிப்படையில் கம்பஹா, மல்வத்த வீதி, அஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தமிந்து லக்ஷான் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குற்றத்திற்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் மற்ற சந்தேக நபரையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று குற்றத்திற்கு உதவியதற்காக, தமித் அஞ்சன நயனஜித் என்ற 25 வயது இளைஞரும், உடுகம்பொல, அஸ்கிரியல்பொதவைச் சேர்ந்த 19 வயது சாமோத் கிம்ஹான் என்ற இளைஞரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
