காவல்துறை அதிகாரி சித்திரவதை : அடிப்படை உரிமைகளை மீறிய ரிஐடி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கம்பகா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த லக்ஸ்மன் குரேயை, சட்டவிரோதமாக தடுத்து வைத்து, சித்திரவதை செய்ததன் மூலம், காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அடிப்படை உரிமைகளை மீறியிருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி காரணமின்றி கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி குரே, 14 ஆண்டுகள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அடிப்படை உரிமைகள் மீறல்
இதன் மூலம், அரசியலமைப்பின் பிரிவு 11 மற்றும் 13(2) இன் கீழ் மனுதாரரின் அடிப்படை உரிமைகள், மீறப்பட்டுள்ளதாக நீதியரசர்களின் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் முர்து பெர்னான்டோ, நீதியரசர் பிரியந்த பெர்னான்டோ ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், நீதியரசர் நவாஸ் இந்த தீர்ப்பை அளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே படுகொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக குரே மீது பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குற்றம்சாட்டியிருந்தனர்.
அவர் 2010ஆம் ஆண்டு தனது சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய மூலம் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
சட்டவிரோதமாக பூசா சிறையில் தடுத்து வைப்பு
அப்போதைய பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் தான் சட்டவிரோதமாக பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில், குரேவுக்கு அரசாங்கம் 30,000 ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மனுதாரரை சித்திரவதை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பயங்கரவாத தடுப்புப் பிரிவின் இரண்டு அதிகாரிகள் தலா 300,000 ரூபாவை தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும் என்றும், வேறு 02 அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட நிதியில் இருந்து தலா 200,000 ரூபாவை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்று ஓய்வுபெறுகின்ற நிலையில், அவர் வழங்கிய இறுதி தீர்ப்புகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
