புலிப் பூச்சாண்டி - சீனப் பூச்சாண்டியானது! டக்ளஸ் குற்றச்சாட்டு
தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக இன்று(20) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எரிபொருள் விலையேற்றம் என்பது அமைச்சர் உதயகம்மன்பிலவின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. இந்தத் தீர்மானம் தற்போதைய அரசாங்கத்தின் கூட்டுத் தீர்மானமாகும்.
எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நேரத்தையும் மக்களின் வரிப் பணத்தினையும் வீண் விரயமாக்கும் செயலாகும். ஒரு நாட்டின் எரிபொருள் விலையேற்றமானது, அந்நாட்டின் அனைத்துப் பொருட்களினதும் விலையேற்றத்துக்கு காரணமாகும் என்பதை நான் புதிதாகக் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
எமது நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியதொரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடானது எமது நாட்டுக்கு மாத்திரம் நிகழ்ந்துள்ளதொரு நிலையல்ல.
கொரோனா அனர்த்த நிலை காரணமாக முழு உலகமே இன்று பொருளாதார நிலையில் பாரிய பாதிப்புகளை கண்டு வருகின்றன.
கடந்த ஆட்சியின் தூர நோக்கற்ற பொருளாதார கொள்கையானது எமது நாட்டு கஜானாவை துடைத்து வைத்திருந்த நிலையில் தான் நாம் இந்த கொரோனா அனர்த்தத்திற்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
இத்தகைய நிலைமைகளின் முன்பாக எமது மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற சந்தர்ப்பத்தில், எரிபொருளின் விலையேற்றமானது மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையைப் போன்றதாகிவிட்டது என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.
அதேநேரம், எரிபொருள் விலையேற்றம் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்தையும் இந்த நாட்டின் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அதேவேளை, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர் உதயகம்மன்பில் ஆகியோருடன் கலந்துரையாடி 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட இருந்த மண்ணெண்ணையின் விலையை 7 ரூபாயினால் மாத்திரமே அதிகரிக்கச் செய்துள்ளோம்.
இலங்கையானது எரிபொருளுக்கென மிக அதிகளவிலான அந்நிய செலாவணியை செலவிடுகின்ற ஒரு நாடு மட்டுமல்ல, எரிபொருள் மூலமாக போக்குரத்து சேவைகள், மின்சார உற்பத்தி, கைத்தொழில் நிலையங்கள் போன்றவற்றை செயற்படுத்துகின்ற ஒரு நாடாகவும் உள்ளது.
இறக்குமதி மீது தங்கியிருக்கின்ற எமது நுகர்வுக் கலாசாரத்தை உற்பத்திகள் மீது தங்கியிருக்கக் கூடிய நுகர்வுக் கலாசாரமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனம் முதற்கொண்டு, இந்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகள் வரை இந்த நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தையே வலியுறுத்திள்ளன. அதனையே நாம் செயற்படுத்தி வருகின்றோம்.
கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில், இயன்றளவில் கடற்றொழிலையும் நன்னீர் சார்ந்த வோண்மைத் துறைகளையும் மேலும் மேலும் பரவலாக வளர்த்தெடுத்து உற்பத்திப் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கின்ற நடவடிக்கைகளை இடைவிடாது மேற்கொண்டு வருகின்றேன் என்றார்.