தமிழரசுக் கட்சி எவ்வித கடிதத்தையும் ஜெனிவாவிற்கு அனுப்பவில்லை - சுமந்திரன் ஆணித்தரம்
ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக தமிழரசுக் கட்சி எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை. ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பால் அதனுடைய தலைவர் சம்பந்தனின் கையொப்பத்துடன் ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் இன்று (09) வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது வவுனியாவில் பொதுமக்களின் காணிகளை வனவளதிணைக்களத்தினர் எல்லைப்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சி. அந்த கூட்டமைப்பாக தான் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.
ஏனைய கட்சிகள் வேறாக செயற்பட்டு வருவது தொடர்பாக நாங்கள் அவர்களோடு பேசலாம்.
ஆனால் தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் நாங்கள் கூட்டமைப்பை உடைத்து தனியாக செயற்படவில்லை எனத் தெரிவித்தார்.