பிள்ளையானுக்கு அஞ்சுகிறது கூட்டமைப்பு - காரணத்தை வெளியிட்ட குமாரஸ்ரீ
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பிள்ளையானைக் கண்டதும் பயத்தினை ஏற்படுத்தியுள்ளதாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கே. குமாரஸ்ரீ குற்றம்சாட்டியுள்ளார்.
அம்பாறை ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற காரைதீவு பிரதேச சபை விவகாரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதக்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினராக செயற்பட்டு வருகின்றேன். 2011 ஆண்டு இடம்பெற்ற பிரதேச சபை தேர்தலில் தற்போது தவிசாளராக உள்ளவருடன் நானும் போட்டியிட்டிருந்தேன்.
எனவே தான் 2011 ஆண்டு காரைதீவு பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வந்தது. ஆகவே 2011 ஆண்டு முதல் இன்று வரை அந்தக் கட்சியின் செயற்பாடு இம்மண்ணில் இருந்து வருகின்றது.
தற்போது தவிசாளருக்கு பீதி வந்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அப்பொழுது மக்களால் துரோகியாக வர்ணிக்கப்பட்டவர். தற்போது தியாகி என்பதற்கு அப்பால், அதற்கும் ஒரு படி சென்று மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இச்செயற்பாடு பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் சிவனேசதுரை சந்திரக்காந்தனை (பிள்ளையான்) கண்டவுடன் கொதித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஏனெனில் அவர்களுடைய பலம் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தி கொண்டிருக்கின்றது. இதனால் அவர்களுக்கு பயம் வந்திருக்கின்றது.
நான் காரைதீவு பிரதேசத்தில் இருக்கும் வரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அதன் அரசியலை மேற்கொண்டே இருக்கும் என்றார்.