தமிழர்களுக்காக இந்தியாவுடன் கூட்டிணையுமா அமெரிக்கா? கூட்டமைப்பினர் அழுத்தம்
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்தியாவுடன் இணைந்து கூட்டாக அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் குழு அண்மையில் அமெரிக்காவிற்கு சென்று இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா திரும்பியுள்ள நிலையில், நிலுவையில் உள்ள பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளுடன், தமிழ் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அமெரிக்கா பரிந்துரைப்பது முக்கியம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளதாக த ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா சென்ற போது எம்.ஏ சுமந்திரன், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.என் திருமூர்த்தி ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்புக் குறித்து ஹிந்துவுக்கு விளக்கமளித்துள்ள எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து டெல்லிக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதியான அரசியலமைப்பின் மூலம் நீடித்த அரசியல் தீர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் - 1987இல் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக உருவான ஒன்று எனவும், மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்த இலங்கையின் அத்தனை அரசாங்கங்களும் தவறியுள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணங்களுக்கு போதுமான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாமல், தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதன் ஊடாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் மக்கள் தொகையை மாற்றியமைக்கும் அரசின் திட்டத்தை ஏற்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.