கூட்டமைப்பின் ஐ.நா ஆவண சர்ச்சை! தெளிவுபடுத்தினார் சுமந்திரன்
நாங்கள் அனுப்புகின்ற ஆவணங்கள் எங்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தாலும் அதனை படிப்பவர்களுக்கு அது நியாயமானதாக தென்பட வேண்டும். அப்போது தான் அது சர்வதேச அரங்கத்தில் எடுபடுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பேசிய சுமந்திரன்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் நாளை மறுநாள் ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கின்றது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட 46/1 என்கின்ற தீர்மானம் சம்பந்தமான ஒரு முன்னேற்ற அறிக்கை வாய்மொழி மூலமாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அது மட்டும் தான் இந்த அமர்வில் நடைபெறும். வேறு எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படாது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலேயே 46/1 தீர்மானத்தினுடைய முழுமையான எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனுடன் இணைந்து இலங்கை மீதான விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்படும்.
சிலருக்கு நினைப்பு ஆவணங்களை தயாரித்து அனுப்பினால் மாத்திரம் தான் அவர்கள் பார்ப்பார்கள் என்று . ஆனால் அது அவ்வாறில்லை.
அடிமட்டத்தில் இருக்கின்ற பல சிவில் சமூகத்தினருடன் அவர்கள் பேசுவார்கள். அரசியல் கட்சிகளுடன் பேசுவது குறைவு - இதனை நான் தெட்டத் தெளிவாகக் கூறுகிறேன் என்றார்.