மன்னாரில் நடைபெறும் கனிய மணல் அகழ்வைத் தடுப்போம் : சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு
மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த முயற்சிகளைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட மக்களும், மக்கள் பிரதிநிதிகளும்,சமூக அமைப்புக்களும் சேர்ந்து தடுக்கும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அகழ்வுப் பணியை
மன்னார் மாவட்டத்துக்குள் குறிப்பாக மன்னார் தீவு பகுதிக்குள் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இங்கு கனிய மணல்களை அகழ்வதற்கான அகழ்வுப் பணியை மேற்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
இது தொடர்பாக தொடர்ச்சியாக நாங்கள் எதிர்ப்பை காண்பித்து வருகின்றோம், அண்மையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அமைச்சின் அழைப்பின் பேரில் பல்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மன்னார் தீவு பகுதிக்குள் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டது, அன்று நாடாளுமன்ற தினம் என்பதால் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க முடியாத சூழ்நிலை உருவானது.
அதே வேளை அன்றைய நாள் பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னார் தீவினுடைய நிலப்பரப்பும் மன்னார் கடல் நிலப்பரப்பின் அமைவும் சம அளவாக இருப்பதால் இங்கு அகழ்பணி மேற்கொண்டால் தீவு அழிந்து போகும் எனவே வந்திருக்கும் அதிகாரிகளிடம் இதை தெளிவுபடுத்துமாறு கூறப்பட்டது.
மேலும் இங்கே அகழ்வுப் பணியை மேற்கொள்ள மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதி கிடைக்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு இருப்பதனால் இதனை நடைமுறைப்படுத்த முடியாது என்ற தகவலை அதிகாரிகளிடம் தெரியப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மன்னார் தீவு அழிவிற்கு
தவிரவும், கொழும்பில் வடமாகாண ஆளுநரை சந்தித்து இந்த மணல் அகழ்வு தொடர்பாகவும் மணல் அகழ்வுக்கான ஆய்வு தொடர்பாகவும் எமது எதிர்ப்பை தெரிவித்திருந்தோம்.
மன்னார் தீவினுடைய நில அமைப்பைப் பொருத்தவரையில் இங்கு ஆராய்ச்சியோ அகழ்வோ மேற்கொண்டால் எதிர்காலத்தில் மன்னார் தீவு அழிவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆளுநர் ஏற்றுக்கொண்டர்.
எனவே இந்த முயற்சியை இந்த நிறுவனம் கைவிட வேண்டும், அரசாங்கத்திடமும் இதையே தான் தொடர்ச்சியாக நாங்கள் கூறி வருகிறோம், எங்களுடைய தீவு பகுதிக்குள் எந்த விதமான ஆராய்ச்சியோ அகழ்வுப்பணியோ மேற்கொள்ள வேண்டாம் என்பதை மீண்டும் மீண்டும் அரசாங்கத்திற்கு கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
நீங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் இங்குள்ள மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சமூக அமைப்புகளும் இந்த கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கான முழு முயற்சியும் எடுப்பார்கள்." என அவர் தெரிவித்தார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |