இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்
இன்றைய (09.10.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காகவும் காலை 11.00 மணி முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன.
(i) தியகம வனத்தைப் பாதுகாத்தல் (ஹர்ஷ த சில்வா).
(ii) புத்தளம் தொடருந்துப் பாதையில் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல் (சித்ரால் பெர்னாந்து).
(iii) 1983 ‘கறுப்பு ஜூலை’ யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், மேலும் இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல் (அமிர்தநாதன் அடைக்கலநாதன்).
(iv) வீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல் (லசித் பாஷண கமகே).
(v) இலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல் (ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி).
(vi) நுண் நிதிக் கடன்களைப் பெற்று அக்கடன்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் (சமிந்த விஜேசிறி).
(vii) இலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல் (ரவி கருணாநாயக்க).
மாலை 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |