விடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
புதிய இணைப்பு
மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா (Nuwaea eliya) மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் ஏனைய வான்கதவுகளும் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணையின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொள்கிறது.
சென்.கிளயார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர் மட்டம், பெய்து வரும் கனமழையால் அதிகரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology) இன்று (21.07.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
காற்றின் வேகம்
வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு சுமார் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
