கொட்டித் தீர்க்கும் கனமழை - இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு
புதிய இணைப்பு
கிளிநொச்சி (Kilinochchi) - இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது மாங்குளம் - கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் இரணைமடுக்குளம் தற்போது 36 அடி 10.5 அங்குல அளவுகளை தாண்டி உள்ளதுடன் குளத்தின் 10.5 அங்குலம் வான் பாயந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் மிகவும் அவதானம்
குளத்தின் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியிடப்படுகின்றமையால் குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்ற மையால் மாவட்டத்தில் உள்ள சிறு குளங்கள் கனகாம்பிகைகுளம், வன்னேரி குளம், பிறமந்தனாரு குளம் ஆகியன வான் பாய ஆரம்பித்துள்ளது.
முதலாம் இணைப்பு
கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |