கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று (05) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of meteorology) தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி, வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதேபோல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இவ்வாறான வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இந்நிலையில், சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
வெளியில் நடமாடுதல்
அதற்கிணங்க இன்று (05) நண்பகல் 12.12 அளவில் பலப்பிட்டி, எல்பிட்டி, மொரவக்க மற்றும் திஸ்ஸமஹாராமை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
எனவே அதிக வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுக்கின்ற அதே சமயம் நண்பகல் வேளைகளில் வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNELஇல் இணைந்து கொள்ளுங்கள்...! |