24 மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள பாரிய சூறாவளி! மக்களுக்கு எச்சரிக்கை
கிழக்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தம் தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அது மேலும் வலுவடைந்து மே 24ஆம் திகதி (இன்று) ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியானது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மே 26ஆம் திகதியளவில் மேற்கு வங்காள கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும் மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.