தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம்: அதிபர் ரணில் திட்டவட்டம்
எதிர்காலத்திற்கு ஏற்ற, தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பபட்டு வருவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
சிலாபம் (Chilaw), கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தின் முதற்கட்டக் கட்டடத்தை நேற்று (14) மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த அதிபர், “கடினமான பொருளாதார சூழ்நிலையிலும், நாட்டின் பிள்ளைகளுக்கு நவீன கல்வியை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. கடந்த கால கல்வி முறைகள் பற்றி தற்போது பேசுவதில் அர்த்தமில்லை.
சிறந்த கல்வி
எதிர்காலத்தைப் பார்த்து, தெற்காசியாவில் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்க வேண்டும். நமது நாட்டின் பலம் கல்விதான். நம் நாட்டில் எப்பொழுதும் சிறந்த கல்வி முறை உள்ளது கல்வியில் புதிய தொழில்நுட்பத்தை உள்ளீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், இந்நாட்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்தக் கொள்கைகளை செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் (Nazeer Ahamed) , வென்னப்புவ ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் புத்திக சேசத்புர, கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர, சிலாபம் கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் பிரசாத் ரத்நாயக்க, வடமேல் மாகாண கல்விச் செயலாளர் நயனா காரியவசம், பாடசாலை அதிபர் துளீகா பிரியதர்ஷனி உள்ளிட்டவர்களும், கல்வி அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |