தனிமைப்படுத்தப்படப்போகும் இஸ்ரேல் : எச்சரிக்கும் அமெரிக்கா
ரஃபா மீது தாக்குதல் நடத்துவது இஸ்ரேலை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தும் அபாயம் கொண்டது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தற்போது ரஃபா மீது தாக்குதல் நடத்துவதுதான் ஹமாசுக்கு எதிரான இலக்கை முழுமையடையச் செய்யும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தவிரவும், அங்குள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்த திட்டத்தினை குறிப்பிட்டிருந்தார்.
திட்டத்தை கைவிட வேண்டும்
காசாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரஃபா பகுதியில்தான் உள்ளனர். இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்படும்.
இதனால், மனிதாபிமான உதவிகள் கிடைக்கப் பெறாமல் மக்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அதனால் ரஃபா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஜோ பைடன் நெதன்யாகுவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை வலியுறுத்தி சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்தபோது, ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் உலகளவில் தனிமைப்படுத்தும் நிலை அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் தனியாக செல்லும்
அதுமாத்திரமன்றி, இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள பலஸ்தீன மக்கள் இதுவரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தவிரவும் முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "ரஃபா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால், இஸ்ரேல் தனியாக செல்லும்" எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |