அடுத்துவரும் நாட்களில் எடுக்கப்படவுள்ள கடினமான தீர்மானங்கள் - அரசாங்கம் அறிவிப்பு
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மக்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இனி வரும் நாட்களில் கடினமான தீர்மானங்களும் எடுக்கப்படலாம் என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன(SM Chandrasena) தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் எதிர்தரப்பினர் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்வைக்கின்றனர். பூகோள பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொதுவான விளைவினை எதிர்தரப்பினர் நன்கு அறிவார்கள். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்களை தவறான முறையில் வழி நடத்துகிறார்கள்.
இலங்கையில் கனிய வளங்கள் கிடையாது.சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் போது தேசிய மட்டத்தில் விலையினை குறைக்க முடியாது. இது பொதுவானதொரு விடயமாகும்.எரிபொருள் விலையேற்றம் என்பது தற்காலிக பிரச்சினையாகும். இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். மக்களுக்கு நிவாரண விலையில் பொருட்கள் தற்போதும் வழங்கப்படுகிறது.
புத்தாண்டு காலத்தின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் பொது மக்களும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.