இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள் : முதலிடம் பிடித்தது எந்த நாடு தெரியுமா
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலும் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 600,000ஐ தாண்டியுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
அதன்படி, இந்த ஆண்டின் (2024) மார்ச் மாதம் 27ஆம் திகதிக்குள் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 608,475 ஆக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதே எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையை, கடந்த ஆண்டின் (2023) இல், ஜூன் மாத இறுதியிலேயே எட்ட முடிந்ததாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை
இந்த நிலையில், கொரோனா தொற்றுநோய் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் இலங்கைக்கு 700,000 சுற்றுலாப்பயணிகளின் வருகை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் (2024) மார்ச் 27 ஆம் திகதி வரை, இலங்கைக்கு மொத்தம் 181,872 சர்வதேச சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர், அதில் ஒவ்வொரு வாரமும் சராசரியான வருகை சுமார் 46,000 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவிரவும், தினசரி சராசரியாக வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை சுமார் 6,700 ஆகவும் காணப்படுகிறது, இதனால் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 200,000 ஐத் தாண்டியிருக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்தியா முதலிடம்
தவிரவும் இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளனர், அவர்கள் மொத்த எண்ணிக்கையில் 16 சதவீதத்தைக் கொண்டிருப்பதால் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களில் முதல் இடத்தை இந்தியா (india) பிடித்துள்ளது.
அதே போல் சுற்றுலாப்பயணிகளின் மொத்த வருகையில் 14 சதவீதத்தை கொண்டுள்ள ரஷ்யா (Russia) இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஜேர்மனியும் (Germany), நான்காவது இடத்தில் இங்கிலாந்தும் (England) ஐந்தாவது இடத்தில் சீனாவும் (China) உள்ளது.
மேலும்,மத்திய வங்கியின் அண்மைய தரவுகளின்படி, ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறையின் வருமானம் மொத்தம் 687 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
இது சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 118.2 சதவீத வளர்ச்சியைக் காண்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |