இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்...முதலிடம் பிடித்தது எந்த நாடு தெரியுமா...!
இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் (2024) 800,000 ஐத் தாண்டி சுற்றுலாத்துறை ஒரு மைல்கல்லை எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின் படி, மே மாதம் 5 ஆம் திகதி இந்த இலக்கு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது, இதன்படி மே மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 819, 866 ஆக பதிவாகியுள்ளது.
அதன்படி மே மாதத்தின் முதல் ஒன்பது நாட்களுக்கு 35,215 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், அதில் தினசரி வருகை சராசரி சுமார் 3,900 ஆக காணப்படுகிறது, இது கடந்த மாதங்களில் 5,000 ஆகக் காணப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் ஒரு வீழ்ச்சியாகவே கருதப்படுகிறது.
இந்தியா முதலிடம்
ஏப்ரல் முதல், கோடை காலம் வரை, விடுமுறை காலம் என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்படுவதாக கூறப்பட்டாலும், விசா வழங்கும் முறையில் ஏற்பட்ட பிரச்சினையும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையைப் பாதித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நிலைமை இவ்வாறிருக்கையில் இந்த மாதம் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளில் அதிகளவு பங்களிப்பை வழங்கிய நாடாக இதுவரை இந்தியா (India) விளங்குவதாக கூறப்படுகிறது, இது மொத்த வருகையில் 21 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
மாலைதீவு இரண்டாவது இடம்
இரண்டாவது இடத்தினை 11 சதவீத பங்களிப்புடன் மாலைதீவு (Maldives) பிடித்துள்ளது, மூன்றாவது இடத்தினை 7 சதவீத பங்களிப்புடன் ஐக்கிய இராச்சியம் (United Kingdom) பிடித்துள்ளது.
இந்த வரிசையில் 6 சதவீத பங்களிப்பை அளித்து நான்காவது இடத்தில் சீனாவும் (China), ஐந்தாவது இடத்தினை ரஷ்யாவும் (Russia) பெற்றுள்ளன. இலங்கையின் சுற்றுலாத்துறையில் பல மாதங்களாக, முதல் மூன்று இடங்களில் ஒன்றை ரஷ்யா பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |