சுற்றுலாப் பயணிகள் இலங்கை வர மறுப்பது ஏன்? ரகசியம் உண்டென்கிறார் விஜித ஹேரத்
நாட்டில் மின்சாரம் இல்லை, எரிவாயு வெடிப்பு, தொடரூந்து சேவைகள் அடிக்கடி இரத்துச் செய்யப்படுகின்ற காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு விரும்பமாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ( Vijitha Herath)தெரிவித்துள்ளார்.
இன்று(26) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நிதி நெருக்கடி விடயத்தில் ஏதேனும் ரகசிய காரணங்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“ அரசாங்கம், எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லை என்று கூறுகின்ற காரணங்களுக்கு பின்னால் இரகசியங்கள் இருக்கலாம்.
டொலர்கள் பற்றாக்குறை என்று கூறிக்கொண்டிருக்கும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்ததும், டொலர்களை விடுவிப்பதன் காரணமாகவே இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
நாட்டின் மின்சார விநியோகத்தில் நாளை என்ன நடக்கும் என்று தெரியாத அளவில் இன்று பிரச்சினை, உக்கிரமடைந்துள்ளது. களனி திஸ்ஸையில் இன்று இரண்டு நாட்களுக்கே எரிபொருள் உள்ளது. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. சப்புகஸ்கந்த மின்சார மையத்தில் உலை எண்ணெய் தீர்ந்து போயுள்ளது.
இந்த நிலையில் இலங்கை வரும் கப்பலில் இருந்து டீசல் இறக்கப்பட்டாலும் அதனை இலங்கை வாகனங்களுக்கு விநியோகிக்கும்போது, மின்சார மையப் பயன்பாட்டுக்கு வழங்கமுடியாத நிலை ஏற்படலாம்.
மசகு எண்ணெய் கப்பல் இந்த மாத இறுதியில் வந்து சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அது அனுப்பப்பட்டாலும், அதனை சுத்திகரித்து, மின்சார மையத்துக்கு வழங்க ஒரு வாரமாவது செல்லும்.
எனவே மின்சார விநியோகத்தில் பாரிய பிரச்சினை எதிர்நோக்கப்படுகிறது. இதற்கிடையில் நீர் மின்சார உற்பத்தி குறைந்து வருகிறது. தற்போது தேசிய மின்சார உற்பத்திக்கு நீர் மின்சாரம் 30வீத பங்களிப்பையே செலுத்துகிறது. நீரேந்துப் பகுதிகளில் நீரின் அளவு குறைவாக இருப்பதே இதற்கான காரணம்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. எனினும் நாட்டில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்வதால், சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு விரும்பமாட்டார்கள்” என்றார்.