மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புதிய இணைப்பு
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நேற்று (26) வரை இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று (27) அதிகாலை மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டது.
இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதுடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்தோடு, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்படும் நிலையில் விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலாக நீர் வெளியாகுவதோடு, காசல்ரீ நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் ஹொலம்புவ பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், களனி கங்கையின் நீர்மட்டமானது கிளென்கோர்ஸ், கித்துல்கல, தெரணியகல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ளது.
அதேநேரம், நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் தல்கஹகொட பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மகாவலி கங்கையின் நீர்மட்டம் நாவலப்பிட்டி மற்றும் பேராதெனிய ஆகிய பகுதிகளில் அதிகரித்து வருகிறது.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு
அத்துடன், மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் மனம்பிட்டிய பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் யான் ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் ஹொரவப்பொத்தானை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், மா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், யக்காவௌ பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், தெதுறு ஓயாவின் நீர்மட்டம் மொரகஸ்வௌ பகுதியிலும், மஹா ஓயாவின் நீர்மட்டம் படல்கம பகுதியிலும் அதிகரித்துவருகிறது.
மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் தந்திரிமலை பகுதியில் அதிகரித்துள்ளதாகவும் தெதுரு ஓயா, ராஜாங்கனை, கவுடுல்ல, யான் மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறப்பு வீதம் அதிகரிக்ககூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
பயணிகளுக்கு கோரிக்கை
அத்துடன், பல பகுதிகளில் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மேலும் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மல்வத்து ஓயாவை சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
அதற்கமைய, மஹாவிலச்சி, வெங்கலச்செட்டிக்குளம், நானாட்டான், முசலி மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களும், அவ்வழியாகச் செல்லும் பயணிகளும் இது தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |