கொழும்பு கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான தொடருந்து சேவைகள் ஆரம்பம்!
டித்வா சூறாவளியினால் சேதமடைந்திருந்த வடக்கு தொடருந்து மார்க்கம் புனரமைக்கப்பட்டு, கொழும்பு கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான தொடருந்து சேவைகள் இன்று (09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புனரமைப்புப் பணிகளுக்காகத் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்தநிலையில், தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கிடையிலான தொடருந்துகள் குறைந்த வேகத்துடனேயே பயணித்தன.
சேதமடைந்த பகுதி
சேதமடைந்த பகுதிகளை முழுமையாகப் புனரமைப்பதற்காக வடக்கு தொடருந்து சேவைகள் மீண்டும் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்திய அரசின் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் நிதிப் பங்களிப்பில் இந்த மார்க்கத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து கொழும்பு கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான தொடருந்து சேவைகள் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், இன்று காலை 5.15-க்கு கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை நோக்கியும் பிற்பகல் 1.05 இற்கு காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை நோக்கியும் பயணிக்கும் தொடருந்துகளில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




