சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் தேசத் துரோகிகளாம்..!
சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் தேசத் துரோகிகளே உள்ளனர் என்றும், அவர்கள் சகல பிரஜைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, சிறிலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பில் இன்று(11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு தடைகள்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்ட சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பல்வேறு தடைகள் வருவதாகவே சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவித்துள்ளனர்.
அவ்வாறு கூறினால் ஜனநாயக ரீதியில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது இலஞ்சம், ஊழல், கப்பம், கொமிசன் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுமா என்பது பிரச்சினைக்குரியது.
நாட்டில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய கிடைத்த பணம் கூட திருடப்பட்டுள்ளது. இப்படி தடை உத்தரவு வரும் போது கிரிக்கெட் விளையாட்டை எப்படி வலுப்படுத்துவது?
தொடர்ச்சியாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இந்த அறிக்கைகள் பயனற்றது.
திருடப்படும் பணம்
நாட்டு மக்களே கிரிக்கெட்டை பாதுகாக்க முன்வர வாருங்கள்! இவ்வாறு திருடப்படும் பணம் நாட்டு மக்களுக்கு சொந்தமானது. இவ்வாறு பணத்தை திருடும்போது முதுகெலும்பில்லாதவர்கள் போல் இருப்பதா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்தில் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல ஜனநாயகம் என்ற பெயரில் 220 இலட்சம் மக்களும் ஒன்று திரள வேண்டும்” -என்றார்.