பயணத்தடை தளர்வை அடுத்து நீர்கொழும்பு நகரின் காட்சிகள்
நாடு முழுவதும் பயணத்தடை இன்று காலை 4 மணிமுதல் இரவு 11 மணிவரை நீக்கப்பட்டதை அடுத்து நீர்கொழும்பு நகரில் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை காண முடிந்தது.
பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக பொருட்கொள்வனவு செய்தல் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கினர்.
அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. எனினும் கடைகளுக்கு குறைந்த எண்ணிக்கையானவர்களே வருகை தந்ததை காண முடிந்தது. பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நடை பயணமாகவே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டபோதும் பலர் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, கார் , துவிச்சக்கர வண்டி போன்றவைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வருகை தந்ததை காண முடிந்தது.
தனியார் அங்காடி நிலையங்களுக்கு மக்கள் வாகனங்களில் வருவது தடை செய்யப்பட்டதன் காரணமாக மக்கள் வீதியோரத்தில் வாகனங்களை நிறுத்தி அங்கு செல்வதையும் அவதானிக்க முடிந்தது. நகரில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. வரையறுக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
நகரின் பிரதான வீதிகளில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் பயணிப்பதையும் காண முடிந்தது. பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது. பொது போக்குவரத்து இடம்பெறவில்லை. உணவகங்கள் மூடப்படடிருந்தன.