சூழலியலுக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் இணைந்த மர நடுகைத் திட்டம் ஆரம்பம்
சூழலியலுக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் இணைந்த மர நடுகைத் திட்டத்தை தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் (Tamil diaspora Alliance) என்ற அமைப்பு மாகாண மர நடுகை மாதமான நவம்பர் மாதத்தில் ஆரம்பித்துள்ளது.
ஐந்து வருட திட்டமாக ஐம்பதாயிரம் தென்னை மரக்கன்றுகளை நடும் தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் என்ற அமைப்பின் திட்டத்தில் இருந்து நிதி உதவி பெற்று கிராம மக்கள் அமைப்பினால் மர நடுகை செய்யப்பட்டது.
இவ் ஐந்து வருட திட்டம் சுமார் 600 தொடக்கம் 900 மில்லியன் வருட வருமானம் ஈட்ட கூடிய திட்டமாகும் என்கின்றது அந்த அமைப்பு. இதுபோல பழ மரச் செய்கை மூலம் பொருளாதாரத்தை ஈட்டும் முயற்சியும் முன்னெடுக்கப்படுகிறது.
கடந்த 30.11.2021 அன்று கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முல்லைத்தீவு மாவட்ட எல்லைக் கிராமங்காளாகிய கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குதொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் கிழக்கு கர்நாட்டுக்கேணி, கொக்கிளாய் வடக்கு, கொக்கிளாய் கிழக்கு ஆகிய ஆறு கிராம சேவையாளர் பிரிவில் தலா 200 தென்னங்கன்றுகளும் 50 தேசிக் கன்றுகளும் கிராம சேவையாளரால் தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகள் வீதம் ஆறு கிராம சேவையாளர் பிரிவிற்கு மொத்தமாக 1200 தென்னங்கன்றுகளும் 300தேசிக் கன்றுகளும் (V. P. foundation ) கிராம மக்கள் அமைப்பு தொண்டர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட கிராம மக்கள் அமைப்பு இனணப்பாளர் வே. கரிகாலன், கிராம சேவையாளர்கள், கிராமமட்ட அமைப்புக்கள் கலந்துகொண்டு கன்றுகள் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். வடமாகாண மரநடுகை மாதத்தை ஒட்டி இவ் மரநடுகை நிகழ்வு நடைபெற்றது.
V. P. foundation இனால் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகளும் தேசிக் கன்றுகளும் மூன்று மாதங்களின் பின்னர் ஆய்வு செய்யப்பட்டு இந்தப் பயனாளிகளுக்கு அவர்களின் காணிகளில் மேலும் வருமானம் வரக்கூடிய பயன்தரும் மரக்கன்றுகள் தொடர்ச்சியாக வழங்கி அறிவூட்டி சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி குடும்ப வருமானத்தை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது என கிராம மக்கள் அமைப்பு இணைப்பாளர் குறிப்பிட்டார்.

