இனவாத அரசியலுக்காக வலுக்கட்டாயமாக அமர்த்தப்பட்ட புத்தர்!
தமிழர் தரப்பு அரசியல் உட்பட தென்னிலங்கை தரப்பு அரசியல் வரை தற்போது பாரிய பேசுபொருளுக்கு உள்ளாகி இருக்கும் விடயம்தான் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம்.
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.
இதையடுத்து, எழுந்த எதிர்ப்பு காரணமாக காவல்துரையினரால் நேற்று முன்தினம் இரவு (16) சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
இதன்பின்பு, நேற்று (17) மீண்டும் அதே சிலை அதே இடத்தில் வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்த கருத்தொன்று தீயாய் பரவி சர்ச்சைக்குள்ளாகி இருந்தது.
இது எதிர்தரப்புக்கு கிடைத்த முக்கிய தலைப்புகளில் ஒன்றாகவும் மாறியது.
அதாவது பாதுகாப்பு கருதியே அந்த சிலையை அங்கிருந்து அகற்றியதாகவும் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது ஒரு புறமிருக்க எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இந்த விவகாரம் குறித்து வெளிப்படுத்திய கருத்துக்கள் இனவாதத்தை முன்னிருத்தியிருந்ததாக தமிழர் தரப்புகளில் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
அதாவது இந்த பிரச்சினை ஒரு தேசிய பிரச்சினை எனவும் மற்றும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான கருத்துக்களுக்கு தமிழர் தரப்பு அரசியல் தலைமைகள் தமது கடும் கண்டனங்களை நாடாளுமன்றம் உட்பட சமூக ஊடகங்கள் வரை பதிவு செய்திருந்தனர்.
மேலும் இந்த விவகாரம் 21 ஆம் திகதி எதிரணிகள் நடத்தும் பேரணியை பூதாகரமாக்கும் அடித்தளமா என்ற கேள்வி எழுகின்றது.
குறிப்பாக திருகோணமலை சம்பவம் குறித்த விவாதம் பூதாகரமாக ஆன பின்னர் நாமல் வெளியிட்ட முகநூல் பதிவு இனவெறியைத் தூண்டுவதற்காக வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்வா என்ற கேள்விகளை தொடுத்து வருகின்றது.
குறித்த பதிவில் “அமரபுர மகா நிகாயாவின் கிழக்கு தாமன்கடுவ மற்றும் கிழக்கு தாமன்கடுவ பிரிவுகளின் பிரதம சங்கநாயகம், வெல்கம ரஜமஹா விகாரை, தொன்ன டியாலிங் ரஜமஹா விகாரை, பொரலுகந்த ரஜமகா விகாரை, முழு தீவுக்கான சமாதான நீதியரசர், வென்சலாவ சீபல் அமானிஸ்ஸ ஶ்ரீ ரதனவப் பாடசாலையின் அதிபர், திருகோணமலை ஸ்ரீ சம்போதி ஜயந்தி போதிராஜ விகாரையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேரர் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் முன்முறமாக ஆனந்த விஜேபால தெரிவித்த கருத்து பேசப்பட்ட அதேவேளை சஜித் பிரமேதாச மற்றும் நாமல் ராஜபக்ச வெளியிட்ட இனவாத கருத்துக்கள் பெரிதாக பேசப்படவில்லை.
இங்கு ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பு என்பதை காட்டிலும் நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் யார் கருத்து தெரிவித்தாலும் அது விமர்ச்சிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
இதில் முக்கியமாக பெருபான்மையினருக்கு கீழ் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவது போல கருத்துக்கள் தெரிவிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் அதை தாண்டி சில அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயத்தை தேடியுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இதற்கு தமிழ் அரசியல் வாதிகளும் விதிவிலக்கல்ல, உதாரணமாக தமிழரசுக் கட்சியின் தலைமைகள் தெரிவித்த கருத்துக்கள் இங்கு உற்றுநோக்கப்பட வேண்டியவை.
காரணம் தமிழர் தரப்பில் பாரம்பரிய மற்றும் நம்பிக்கைக்குரிய கட்சியாக இருக்கும் ஒரு கட்சி இங்கு தமிழ் மக்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்தை முன்னிலைப்படுத்தாமல் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக கூவிக்கொண்டிருக்கின்றனர் என வாதங்கள் வலுத்துள்ளன.
இதில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்த கருத்து முக்கியம் உள்வாங்கப்பட வேண்டிய ஒன்று.
அதாவது, கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும் மற்றும் திருகோணமலை உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இங்கு எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால், முதல்நாள் நாமலுடன் இடம்பெற்ற இருதரப்பு உரையாடல் மற்றும் அருண் எம்.பி மீதான நேரடி தாக்குதல்.
இதுவே அரசியல் ஆதாயமாக்கப்படுகின்ற விடயமா என கேள்வியாகின்றது.
இங்கு நாமல் எழுப்பிய கேள்வியும் மற்றும் சஜித் தரப்பு முன்வைத்த கருத்தையும் ஒருவேளை சுமந்திரன் பார்க்கவோ கேட்கவோ மரந்துவிட்டாரா ?
அத்தோடு, ஆளும் தரப்பு தெரிவித்த கருத்துக்களும் செயற்பாடும் இனவாத அடிப்படையில் இருக்கின்றது எனவும் பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என வெட்கமில்லாமல் நாடாமன்றில் அமைச்சர் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்ட தெரிந்த சட்டத்தரணிக்கு அதே நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் மற்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்த இனவாத கருத்துக்கள் கேட்கவில்லை என்பது சற்று யோசிக்க வேண்டிய விடயம்தான்.
சட்டத்தின்பால் செயற்படும் ஒருவருக்கு தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவருக்கு ஆளும் தரப்பு என்ன ? எதிர் தரப்பு என்ன ? என்னவென்றாலும் இனவாதம் ஏற்றுகொள்ள கூடியது அல்ல எனபதுதானே நிலைப்பாடு.
அன்று பொதுதேர்தலின் போது தமிழ் பொது வேட்பாளரை புறக்கணித்து எந்த தென்னிலங்கை அரசியல் தலைமைக்கு ஒரு பாரம்பரிய அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சி ஆதரவளித்திருந்ததோ அப்படிப்பட்ட அதே அரசியல் தலைமை இன்று சபையில் இனவாதத்தை கக்கியுள்ளார்.
அதே நேரத்தில் எம்.ஏ சுமந்திரனை கடந்த 15 ஆம் திகதி நாமல் ராஜபக்ச சந்திருந்த நிலையில், இதன்போது அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காகவும் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த 21 ஆவது பொதுப் பேரணி குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு, தங்களது அரசியல் இலாபத்திற்காக தமிழ் கட்சியையும் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளையும் நாடி வந்த அரசியல் தலைமைகள் இன்று இனவாத கருத்துக்களை தெரிவித்து தமிழ் மக்களை முடக்குவதை பார்த்துதான் சட்டத்தரணி பொங்கி எழ வேண்டும்.
இருப்பினும், அவருக்கு அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கு ஒரு விடயமாகவே தெரியாமல் ஆளும் தரப்பில் தெரிவித்த கருத்துக்கள் மட்டும் காதில் பலமாக கேட்டுள்ளது.
தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்போம் தமிழ் தேசியத்தை பாதுகாப்போம் என்று வெளியில் கதைப்பவர் இன்று ஆளும் தரப்பு எதிர் தரப்பு என்பதை தாண்டி தமிழ் சமூகத்தை யாரும் அவமதிக்க கூடாது என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தால் அது நியாமான அரசியல்.
ஆனால் மீண்டும் மீண்டும் இங்கு மக்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது மாத்திரமே வழக்கமாக மாறியுள்ளது.
இந்த புத்தர் சிலை விவகாரம் எத்தனை நாள் தொடரும் என்பதை காட்டிலும் இது நாட்டில் மக்களுக்கிடையிலான ஒற்றுமையை அரசியல் தலைமைகள் ஊடாக சீரழிக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
ஆக இங்கு அரசியல் இலாபத்தால் துண்டுப்படபோவது அப்பாவி மக்களே...
மேலும் இனவாதத்தால் அதிகாரத்தை அள்ளி பூசி ஆட்சி செய்த அரசாங்கங்களின் வரிசையில் இருந்து விலகி நிற்பதும் அவர்களை இன்றும் ஆலமாக கற்பதும் அநுர தரப்புக்கு காத்திருக்கும் தற்போது பாரிய சவாலாகியுள்ளது.
🛑 you may like this...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 4 மணி நேரம் முன்