இனமுறுகலை ஏற்படுத்தும் வகையில் தமிழர் தலைநகரில் அரங்கேறிய சம்பவம்
திருகோணமலை மொரவெவ பகுதியில் இனவாதத்தை தூண்டும் நோக்குடன் இனம் தெரியாத நபர்களால் பன்குளம் 4ம் கண்டம் பிரதான வீதியின் அருகில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இன்று (10) காலை அப்பகுதி மக்கள் இது பற்றி மொரவெவ- காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து மொறவெவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சிலைகளும் தேவை இல்லை
சில மாதங்களுக்கு முன் அந்த இடத்தில் புத்தர் சிலை மற்றும் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் கிராம மக்களினால் குறித்த இடத்தில் இரு சிலைகளும் தேவை இல்லை என அகற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று குறித்த இடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பிள்ளையார் சிலை மாத்திரம் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன நல்லுறவினை கெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதென அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், குறித்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலையை அகற்றுமாறும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணை
இதேவேளை குறித்த பகுதியில் தமிழ் சிங்கள இனத்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறான செயற்பாட்டின் இன முருகலை ஏற்படுத்துவதாக மக்கள் கருதுகிறார்கள்.
அந்த இடத்தில் புத்தர் சிலையோ, பிள்ளையார் சிலையோ தேவை இல்லை எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மொரவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.