பூதாகரமாக மாறிய திருகோணமலை பாடசாலையின் அதிபர் மீதான தாக்குதல் விவகாரம்!
திருகோணமலை பிரபல பெண்கள் பாடசாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை முன் ஒன்று கூடிய பழைய மாணாவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்றைய தினம் திருகோணமலை வலயக் கல்வி பணியகத்துக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்றைய தினம் குறித்த பாடசாலையில் கடமை ஏற்பதற்காக சென்ற ஆசிரியர் ஒருவர் அப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை அல்லாத பிறிதொரு ஆடையுடன் பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில் அதிபருக்கும் குறித்த ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது ஆசிரியையால் தாக்கப்பட்ட பாடசாலை அதிபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அப்பாடசாலை மாணவர்கள் நேற்றைய தினம் பாடசாலைக்கு வெளியே ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு முடிவு எட்டப்படாத நிலையில், இரு வருடங்களுக்கு முன்பாக குறித்த பிரச்சினை நிமிரத்தம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த ஆசிரியை மீண்டும் அப் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டது, அரசியல் பின்புலத்திற்கு மத்தியில் நடந்திருப்பதாக தெரிவித்து, ஆசிரியைக்கு இடமாற்றத்தினை வழங்க வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேலதிகாரிகளுக்கு அவர் அறியத்தருவதாக தெரிவித்திருந்தார். எனினும் இதற்கான தீர்வு எட்டப்படும் வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.






