திருகோணமலை கந்தளாய் பகுதியில் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்!
பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் கந்தளாய் நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் இன்றிலிருந்து 7 எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மூடப்படுவதாக கந்தளாய் பிரதேச சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் பிரதேச சபையும்,கந்தளாய் வர்த்தக சம்மேளனமும் இணைந்து இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கந்தளாய் பிரதேசத்தில் இது வரை 57 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு இதில் சிலர் குணமடைந்துள்ளதாகவும், அத்தோடு கந்தளாய் பிரதேசத்தில் இருநூறு குடும்பங்களைச் சேர்ந்த அறுநூறு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பொதுச் சுகாதார சிரேஷ்ட பரிசோதகர் ஏ.டபிள்யு சமன் தெரிவித்தார். இதனைக் கருத்திற்கொண்டே பத்து நாட்களுக்கு கந்தளாய் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கந்தளாய் நகரின் அமைந்துள்ள அத்தியவசிய தேவையுடைய வர்த்தக நிலையங்கள் மட்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கந்தளாய் நகரம் வெறிச்சோடிக் காணப்படுவதோடு தேவைக்கு செல்லுவோரை மட்டுமே வீதியில் காணக்கூடியதாகவுள்ளது.
நகரில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இதற்கிடையில், வீணான ஒன்று கூடல்களை தவிர்த்துக்கொள்ளுமாறும், அத்தியவசிய தேவைக்கு செல்ல ஒருவர் மட்டும் செல்லுமாறும் கட்டாயம் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் சம இடைவெளிகளை பேணி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கந்தளாய் பிரதேச சபையினால் பொது மக்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது.