அகற்றப்பட்ட புத்தர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்த காவல்துறையினர்!
புதிய இணைப்பு
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் வைக்கப்பட்ட விவகாரத்தில் நேற்றையதினம் (16.11.2025) காவல்துறையினரால் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்ட புத்தர்சிலை அரச பாதுகாப்புடன் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

இதேவேளை, திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான கூட்டம் ஒன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற ஸ்தலத்திற்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசாண் அக்மீமன ஸ்தலத்திலிருந்து துறத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் சட்டவிரோதாக நேற்று (16.11.2025) அமைக்கப்பட்ட புத்தர் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே அகற்றப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று (17.11.2025) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புத்தர் சிலை இன்று (17.11.2025) காலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையால் ஏற்பட்ட குழப்ப நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால்,அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பில் காவல்துறையினர் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின்படியே செயற்பட வேண்டியுள்ளது.
இந்த காணி தொடர்பிலான பிரச்சினையை நீதிமன்றத்திலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
அது தொடர்பில் நாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் நீதிமன்றத்திற்கு காரணங்களை சமர்ப்பிக்கவுள்ளோம்.
இதற்கு பின்னர் திருகோணமலையில் எந்த பிரச்சினையும் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |